உ. வே. சாமிநாத ஐயர்
உ. வே. சாமிநாதனார் (பிப்ரவரி 19,1855 – ஏப்ரல் 28, 1942,) உத்தமதானபுரம் வேங்கட
சுப்பையர் மகன் சாமிநாதன் என்பதைச் சுருக்கமாக உ.வே.சா. என அழைக்கப்பட்டார். தமிழ் நூல் பதிப்பில் முன்னோடிகளான ஆறுமுக நாவலர், சி.வை.தாமோதரன் பிள்ளை அவர்களைத் தொடர்ந்து தமிழ் மொழிக்குச் செய்த தொண்டினால் ‘தமிழ்த் தாத்தா’ எனத் தமிழர்களால் சிறப்பிக்கப்பட்டார். தமிழ் மொழியில் அழிந்து போகும் நிலையிலிருந்த பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றைத் தேடித்தேடி அலைந்து பெற்று அச்சிட்டுப் பதிப்பித்தவர். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழுக்குத் தொண்டாற்றியவர்களுள் உ. வே. சாமிநாதன ஐயர் குறிப்பிடத்தக்கவர். உ.வே.சா. 90கும் மேற்பட்ட நூல்களை பதிப்பிதித்தது மட்டுமின்றி 3000கும் அதிகமான ஏட்டுச்சுவடிகளையும் கையெழுத்து ஏடுகளையும் சேகரித்திருந்தார்.
1855ஆம் ஆண்டில் பிப்ரவரி 19, தமிழ் நாட்டில் திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டம் உத்தமதானபுரம் எனும் ஊரில் வேங்கட சுப்பையர் சரசுவதி அம்மாள் இணையருக்கு மகனாய்ப் பிறந்தார். உ.வே.சா. தனது தொடக்கத் கல்வியையும், இசைக் கல்வியையும் சொந்த ஊரில் கற்றார். பின்னர்த் நாகை மாவட்டம் திருவாவடுதுறை சைவ ஆதீனத்திலும் பயின்று தமிழறிஞர் ஆனார். உ.வே.சாவிற்குப் பதினான்காம் வயதில் திருமணம் நடந்தது. பின்னர் கும்பகோணத்திலும் அதன் பிறகு சென்னை மாநிலக் கல்லூரியிலும் ஆசிரியராக இருந்தார்.
சங்க இலக்கியங்களைப் பற்றி இன்று நம்மால் பேசமுடிவதற்கு உ.வே.சா. பெரும் காரணமாவார். தமிழுலகிற்குச் சிலப்பதிகாரம், அகநானூறு, புறநானூறு, மணிமேகலை போன்ற நூற்றுக்கணக்கான நூல்களை அழிவிலிருந்து காப்பாற்றிப் பதிப்பித்துத் தந்தவர் என்னும் பெருமை உடையவர் உ.வே.சா. மேலும், பல தமிழ் இலக்கிய நூல்களைப் பதிப்பித்தார். இத்தகைய அரிய சேவைக்காக அவரின் சீரிய முயற்சிகளும் அதற்காகப் பட்ட சிரமங்களும் அதிகம். இருந்தும் மனம் தளராது இச்சேவையில் ஈடுபட்டு வெற்றியும் கண்டார்.
இவர் ஏட்டுச்சுவடிகளைப் பார்த்து அப்படியே அவைகளைப் பதிப்பித்தல் மட்டும் செய்யவில்லை. சிதைந்து மறைந்துவிட்ட அடிகளையும் சொற்களையும் கண்டு முழுப்பொருள் விளங்கும்படி செய்தார். ஆசிரியர் குறிப்பு, நூற்குறிப்பு போன்ற செய்திகளையும் தொகுத்து வழங்கி, இந்த நூல்களைக் குறித்த முழுபுரிதலுக்கும் வழிவகுத்தார்.
சீவகசிந்தாமணி எனும் ஏட்டுச்சுவடியிலிருந்த நூலை மிகுந்த சிரமத்திற்கிடையில் கற்றுப் பாடம் சொல்லிக் கொடுத்ததால் இந்த நூலில் உள்ள செய்திகளை உணர்ந்தவர், இந்த நூலை 1887ஆம் ஆண்டு முதன்முதலாக வெளியிட்டார். தமிழர்கள் அளித்த நல்லூக்கம் இப்பணியை அவர் தொடர்ந்து செய்ய காரணமாயிற்று. உ.வே.சா. சிந்தாமணி நூலைப் பதிப்பிக்கும் போது இவர் சேகரித்த அனைத்துத் தகவல்களையும் தமது நூலில் வெளியிட்டுள்ளார்கள். இவர் பதிப்பித்த நூலின் தனிச்சிறப்பு இவைகள்தான். இது போன்று தீராத விடாமுயற்சியால் நூலை நன்கு விளக்குவதற்கு இவர் எடுத்த முயற்சியின் பயனாக பல பயனுள்ள தகவல்களும் கிடைத்தன.
அரும்பாவூர் நாட்டார் என்னும் பெருஞ்செல்வர் தமது இல்லத்தில் தங்கியிருந்தபொழுது, உ.வே.சாவின் தமிழார்வத்தை உணர்ந்து, இவரை மீனாட்சி சுந்தரம்பிள்ளை அவர்களிடம் அனுப்பும்படி பரிந்துரைத்தது தம்மனத்தில் பிள்ளையவர்களிடம் பாடம் கேட்க வேண்டும் என்னும் வேட்கையை ஏற்படுத்தியது என்று குறிப்பிடுகிறார். பின்னர் மீனாட்சி சுந்தரம்பிள்ளை அவர்களிடம் சேர்ந்து பாடம் கற்கத் தொடங்கினார். அப்பொழுது, திருவாடுதுறை ஆதினத்தின் தொடர்பும் கிடைத்தது. அத்தொடர்பு இவர் வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இறுதிவரையிலும் இத்தொடர்பு உ.வே.சாவிற்கு மிகுந்த பலத்தையும் மகிழ்ச்சியையும் கொடுத்தது. பிற்காலத்தில் மடத்தின் தலைவருடன் மிகவும் நெருங்கிப் பழகும் வாய்ப்பும் அதனால் அரிய தமிழ்த் தொண்டு ஆற்றவும் இது வழிவகுத்தது
ஒருநாள் மதுரை குடமுழுக்கு விழாவில், தேசிகருக்கு முன்பு வேதநாயகம் பிள்ளையின் பாடல் ஒன்றைக் கூறி விளக்கும்படி தேசிகர் ஐயரவர்களைக் கேட்டுக்கொண்டார். உ.வே.சா. நல்லமுறையில் பாடலை விளக்கிவிட்டு, இறுதி அடியான “இறுமாப்புடைய நடையும் குடையும் என்னிடம் இல்லை” என்ற இவ்வடியை உணர்ச்சிகரமாகக் கூறி முடித்தார். உ.வே.சா. தம்மிடம் வசதியில்லை; ஏழ்மை உண்டு என்ற எண்ணத்தில் இவ்வாறு கூறியதைப் பலகாலம் கழித்து நினைவு கூர்ந்த தேசிகர், பல பரிசுகளுடன் காலணியும் குடையும் அளித்து பிரியாவிடை கொடுத்து அனுப்பினார். திருவாவடுதுறை ஆதினமடத்தில் உள்ள ஒவ்வொரு பொருள் மீதும் ஈடுபாடு கொண்டிருந்த உ.வே.சா. மடத்தை விட்டுச்செல்லும் பொழுது. “அவை சடப்பொருள்களல்லவா அவற்றின் மீது அவ்வளவு பற்றிருப்பது பைத்தியக்காரத்தனம் அல்லவா என்று பிறருக்குத் தோன்றும். எனக்கு உலகமெல்லாம் திருவாடுதுறை மடத்தில் இருந்தது அங்குள்ள பொருள்களைப்பிரியும் போது உலகத்தையே பிரிவது போன்ற உண்ர்ச்சிதான் ஏற்பட்டது”. உ.வே.சா. குடும்பத்தை அவர் தந்தையாரே நிருவகித்து வந்துள்ளார். எங்கும் உ.வே.சா. குடும்பப் பாரத்தையும் குடும்பத்தையும் நிருவகித்ததுமாகக் கூறவில்லை குடும்ப பாரமில்லாமல், தாம் முழு உழைப்பையும் வாழ்நாள் முழுவதும் தமிழுக்காகவே செலவு செய்தார்.
திருவாவடுதுறை ஆதினம் தண்டபாணித் தேசிகன் விரும்பியபடி உ.வே.சா., இராமசாமி முதலியாரைச் சென்று பார்த்தார். தமது அறிமுகத்தின் போது முதலியாரவா்களிடம் தாம் கற்ற பலவகை அந்தாதிகள், பிள்ளைத்தமிழ் நூல்கள் மற்றும் கோவையடக்கமாகப் பல நூல் பெயர்கள் கூறியும் “இதெல்லாம் படித்து என்ன பிரயோசனம்?” என்று முதலியார் வினவினார் என்றும் அதனால் உ.வே.சா. பெரிய அதிர்ச்சியடைந்ததாகவும் கூறுகிறார். மேலும் நைடதம், பிரபுலிங்கலீலை, சிவஞானபோதம், போன்ற பெயர்களைக் கூறியும் அவர் திருப்தியடையாமல் சரி அவ்வளவு தானே என்று கூறிவிட்டார். “இவைகளெல்லாம் பிற்கால நூல்கள், இவைகளுக்கு மூலமான நூல்களைக் கற்றுள்ளீர்களா?” எடுத்துக்காட்டாகச், சீவக சிந்தாமணி என்று கூறியுள்ளார். நூல் கிடைக்கவில்லை; கிடைத்தால் கண்டிப்பாகப் படிப்பேன் என்று கூறிய பின், முதலியாரவர்கள் சீவக சிந்தாமணி நூல் நகல் ஒன்றை உ.வே.சா.விடம் கொடுத்துக் கற்றுவரச் சொன்னதாகவும் அப்பொழுதுதான் சிந்தாமணி நூலின் அருமை உ.வே.சாவிற்குத் தெரிந்தது என்றும் பதிவு செய்கிறார்.
உ.வே.சா. சிந்தாமணியைத் தீவிரமாக ஆராய்ச்சி செய்தார். நச்சினார்க்கினியர் உரையுடன் மூலத்தையும் நன்கு படித்து அறிய முற்பட்டார். பல இடங்களில் பொருள் விளங்கவில்லை. அங்கு வசித்து வந்த ஞானம் படைத்த சமணர்களை அணுகி தமது ஐயங்களைத் தெளிவாக்கிக் கொண்டதாகக் குறிப்பிடுகிறார் உ.வே.சா. சமணர்களுடன் கலந்துரையாடிய போதும்; கர்ண பரம்பரைக் கதைகளைக் கேட்டுத்தெரிந்த போதும் நூலாராய்ச்சியில் புலப்படாத, பலசெய்திகள் புரிந்ததாகவும் குறிப்பிடுகிறார். “ஒரு சொல் தெரியாவிட்டாலும் விடமாட்டேன்” என்கிறார் உ.வே.சா. சிந்தாமணியின் நூலாசிரியராகிய திருத்தக்கத்தேவர் வரலாறும் அவ்வாறு தான் அவருக்குத் தெரிந்ததாகவும் குறிப்பிடுகின்றார்.
அக்காலத்தில் எவ்வித மோட்டார் வாகனப் போக்குவரத்து வசதியில்லாத போதும் கூட நூற்றுக்கணக்கான மைல்கள் பயணம் செய்துள்ளார். தங்குவதற்கு உணவு, உண்பதற்கு வசதியில்லாத போதும், ஊர் ஊராகச் சென்று தெரிந்தவர்கள் வீட்டில் தங்கிக் கிடைத்ததை உண்டு பண்டைய தமிழ் நூல்களைப் பதிப்பிக்கும் பணியில் ஈடுபட்டார்கள். “பழந்தமிழ் இலக்கண இலக்கியச் சுவடிகளைத் தேடி ‘நள்ளிருளோ, கொள்ளு பகலோ, கடுமழையோ, அள்ளு பிணியோ, அவதியோ உள்ளம் தடுக்கும் பகைகள் எது வரினும தள்ளி அடுக்கும் தமிழ்ச் சுவடி தேடிக்கொடுக்கும் தமிழ்த்தாத்தா என்று தரணி புகழ்” என்று ஒரு தமிழ் புலவர் இவரை வருணிக்கிறார்.
சிந்தாமணிப் பிரதியை மேலும் தேடியபொழுது மதத்தின் அடிப்படையிலும் பல இடையூறுகள் வந்தன. இன்னும் பல இடங்களில் அரிய இச்சுவடிகளைத் தீயில் இட்டும் ஆற்று வெள்ளத்தில் இட்டும் அழித்து விட்டதைக் கேட்டு உ.வே.சா. மிகவும் வேதனைப்பட்டுள்ளார். இவ்வாறு தேடிச் சிந்தாமணியின் 23 நகல்களை உ.வே.சா. சேர்த்துவிட்டார். சென்னையில் சி.வை. தாமோதரம்பிள்ளை, சிந்தாமணியைத் தாம் பதிப்பிக்க விருப்பியதாகவும் உ.வே.சா.விடமுள்ள குறிப்புகளனைத்தையும் அவரிடம் தரும்படி வற்புறுத்தியுள்ளார். அரைமனதுடன் இருந்த உ.வே.சா. தாம் ஏற்கனவே வாக்குக் கொடுத்திருப்பதாகவும், முடிவு செய்துவிட்டதாகவும் எத்துணை இடர்பாடுகள் வந்தாலும் இம்முயற்சியிலிருந்து பின் வாங்கப் போவதில்லை என்றும் தீர்மானமாகக் கூறிவிட்டார். நூலை அச்சிடும்பொழுது ஓய்வு ஒழிவில்லாமல் ஒவ்வொருநாளும் அச்சுப்பிரதிகளைத் திருத்திக்கொடுப்பது, கையெழுத்துப்பிரதியைப் படிப்பது, போன்று பல வேலைகள் இருந்தன..
மேலும் திருநெல்வேலி திருவைகுண்டம், பெருங்குளம், ஆறுமுகமங்கலம், நாங்குநேரி, களக்காடு, குன்றக்குடி, மிதிலைப்பட்டி போன்ற ஊர்களுக்குச் சென்று ஏட்டுச்சுவடிகளைத் தேடினார். கிடைத்த சுவடிகளை வைத்து தீவிர ஆராய்ச்சி மேற்கொண்டார். அடியார்க்கு நல்லார் உரையில் பல நூல்களின் பெயர்கள் இருப்பதாகக் கண்ட உ.வே.சா. இந்நூல்களைப் பற்றிய குறிப்பை அவசியம் தம் நூலில் குறிப்பிட வேண்டும் என்று விரும்பினார்கள். நூலிலும், உரையிலும் அறியப்படும் அரசர் பெயர்களையும் வரிசைப்படுத்தி வெளியிட விரும்பினார்.
அடுத்ததாகப் புறநானூறு பதிப்பிக்கும் முயற்சியை உவே.சா. கையிலெடுத்தார்கள். 1894ஆம் வருடம் செப்டம்பர் மாதம் புறநானூறு நூல் பதிப்பிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. உ.வே.சா. பதிப்பித்த எட்டுத்தொகை நூல்களுள் இதுவே முதலானதாகும். முகவுரையில் எட்டுத்தொகையும் அதுபற்றிய வரலாற்றையும், அகம் புறம் என்னும் இருவகைப் பொருளின் இயல்பையும் விளக்கி எழுதிச் சேர்த்துள்ளார்கள். அடுத்து புறப்பொருள் வெண்பாமாலை அடுத்து மணிமேகலை 1896ஆம் ஆண்டு அச்சுக்குக் கொடுத்தார்.
உ.வே.சா. அவர்கள் பதிப்பித்த நூல்கள் சீவக சிந்தாமணி, மணிமேகலை, சிலப்பதிகாரம், புறநானூறு, திருமுருகாற்றுப்படை, பத்துப்பாட்டு, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப் பாலை, மலைபடுகடாம், 12 புராணங்கள், பெருங்கதை, 9 உலா நூல்கள், 6 தூது நூல்கள், 3 வெண்பா நூல்கள், 4 அந்தாதி நூல்கள், 2 பரணி நூல்கள், 2 மும்மணிக்கோவை நூல்கள், 2 இரட்டைமணிமாலை நூல்கள், அங்கயற்கண்ணி மாலை, இதர சிற்றிலக்கியங்கள் 4
தமிழ் தாத்தா
ஆற்றுப்படை நூல்களோடு
மேகலையும் – தொடர்
அடுக்காகச் சிந்தாமணி
பதிற்றுநூலும் !
ஏற்றபுற நானூறும்
இதற்குமேலும்
ஏடுகளைத் தாந்திரட்டிப்
பதித்துயர்ந்தார் !
கற்றறிந்த தமிழறிஞர்
தமிழாசான் – உ.வே.சா.
காலத்தால் மறையாத
பதிப்பரசர் !
முற்றிலுமே தமிழுக்கே
உழைத்தவீரர் ! – அந்த
முழுநிலவில் களங்கம்போல்
குறையுமுண்டு !
நன்றியினை மறப்பதில்லை
நாம்தமிழர் – தாத்தா
நடையில்தான் தள்ளாடும்
மொழிசிக்கல் !
என்றமிழை மொழியென்றே
சொல்லவில்லை – ஆரிய
இடைச்சொல்லாய்த் தான்வைத்தார்
வடசொல்லை !
சாகாத்தமிழ் மனத்தையே
ஈர்த்ததடா – உ.வே
சாவிற்கே தொண்டாற்றப்
பணிந்ததடா !
வேகாத்தமிழ் பகைவென்றே
தழைத்ததடா – மறத்தமிழ்
வேந்தர்கள் காத்திடவே
நிலைத்ததடா !
ஆறுமுக நாவலரே
தமிழ்நாடி – நம்
அருந்தமிழ்நூற் பதிப்பிற்கே
முன்னோடி !
மாறுமுக மல்லாது
மிகைநாடி –சி.வை.தா.
மாண்புறவே பதிப்பித்தார்
தமிழ்த்தேடி !
இன்னவர்க்குப் பின்னாடி
நூல்தேடி – உ.வே.சா.
ஏடுகளைப் பதிப்பித்தார்
தான்தேடி !
முன்னவர்க்கு இவரென்றும்
பின்னாடி – இந்த
மூதுண்மை தெரிகின்ற
கண்ணாடி !
நாம்மதிக்கும் சாமிநாதர்
பதிப்பைப்போல் – வ.உ.சி.
வையாபுரி இருவரந்நாள்
பதிப்பித்தார் !
தாம்போற்றும் தமிழென்றும்
அழிவதில்லை – நம்
தமிழ்மக்கள் நெஞ்சமதன்
இருப்பினெல்லை !
பாம்பின்வாய் நஞ்சைப்போல்
பாய்ச்சிட்டார் – கருத்துப்
பரப்பினிலே ஆரியத்தை
வேய்ந்திட்டார் !
ஆம்! உ.வே.சா. எழுத்தைத்
திருத்திவைப்போம் ! – பகை
அழித்தொழிக்கத் தனித்தமிழை
நிறுத்திவைப்போம் !
சீர்தூக்கி யாம்பார்த்தோம்
வணங்குகின்றோம் – தாத்தா
செயல்கண்டு நெகிழ்வோடு
வாழ்த்துகின்றோம் !
பார்போற்ற அவர்செயலைப்
பகிர்ந்துவைப்போம் – நாம்
பகுத்தாய்ந்தே உண்மைகளைச்
சாற்றிவைப்போம் !
தனித்தமிழ்வேந்தன் மறத்தமிழ்வேந்தன்
