Friday, 27 February 2026

Contact Info

  • ADDRESS: Street, City, Country

  • PHONE: +(123) 456 789

  • E-MAIL: your-email@mail.com

  • Home  
  • இரட்டைமலை சீனிவாசனார்
- Blogs

இரட்டைமலை சீனிவாசனார்

இரட்டைமலை சீனிவாசனார் திவான் பகதூர் இரட்டைமலை சீனிவாசன் (சூலை 7, 1859 – செப்டம்பர் 18, 1945) ஒரு இந்திய அரசியல்வாதி, சமூக சீர்திருத்த செயற்பாட்டாளர், வழக்குரைஞர். ஆதி தமிழ்க்குடி மக்களுக்காகக் குரல் கொடுத்தவர்.  பறையர் மகாசன சபையைத் தோற்றுவித்து, பறையன்  என்ற மாத இதழையும் நடத்தியவர். சென்னை மாகாண சட்டசபை உறுப்பினராக 1923 முதல் 1939 வரை இருந்தவர். சீனிவாசன் அவர்கள் செங்கல்பட்டு மாவட்டத்தில் மதுராந்தகத்திற்கு அருகில் உள்ள கோழியாளம் என்கிற சிற்றூரில் இரட்டைமலை என்பவருக்குப் […]

இரட்டைமலை சீனிவாசனார்

திவான் பகதூர் இரட்டைமலை சீனிவாசன் (சூலை 7, 1859 – செப்டம்பர் 18, 1945) ஒரு இந்திய அரசியல்வாதி, சமூக சீர்திருத்த செயற்பாட்டாளர், வழக்குரைஞர். ஆதி தமிழ்க்குடி மக்களுக்காகக் குரல் கொடுத்தவர்.  பறையர் மகாசன சபையைத் தோற்றுவித்து, பறையன்  என்ற மாத இதழையும் நடத்தியவர். சென்னை மாகாண சட்டசபை உறுப்பினராக 1923 முதல் 1939 வரை இருந்தவர்.

சீனிவாசன் அவர்கள் செங்கல்பட்டு மாவட்டத்தில் மதுராந்தகத்திற்கு அருகில் உள்ள கோழியாளம் என்கிற சிற்றூரில் இரட்டைமலை என்பவருக்குப் பிறந்தார். தெய்வபக்தி மிகுந்த குடும்பத்தில் பிறந்ததால் இவருக்குச் சீனிவாசன் எனப் பெயரிட்டனர். தொடக்கப்பள்ளியில் தந்தையின் பெயரின் முன் எழுத்திற்குப் பதிலாகத் தந்தையின் முழுப்பெயரோடு இரட்டைமலை சீனிவாசன் ஆனார்.

பின்னர் கோழியாளத்திலிருந்து குடும்ப வறுமை காரணமாகவும் சாதியக் கொடுமை காரணமாகவும் தஞ்சை நோக்கி இவரது குடும்பம் இடம் பெயர்ந்தது. அங்கு அதைவிடக் கொடிய சாதிய அடக்குமுறைத் தாண்டவமாடியது.  அதனால் கோவைக்கு இவரது குடும்பம் குடியேறியது. 1939இல் தன் வரலாற்றைச் சுருக்கமாக எழுதி “திவான் பகதூர் இரட்டைமலை சீனிவாசன் அவர்கள் ஜீவிய சரித்திர சுருக்கம்” என்ற பெயரில் 30 பக்க நூல் ஒன்றை வெளியிட்டார். இதனால் ஓரளவு அவரது இளமைக்காலம் குறித்தும் அவருடைய அரசியல் மற்றும் சமூகப் பணிகள் குறித்தும் அறிந்துகொள்ள முடிகிறது.

கோயம்புத்தூரில் இவர் பயின்ற பள்ளியில் சுமார் 400 மாணவர்களில் 10 மாணவர்கள் தவிர மற்ற அனைவருமே பிராமண மாணவர்கள். வறுமை காரணமாக, பள்ளிக் கல்விக்கு மேல்  படிப்பைத் தொடர முடியவில்லை. தீண்டாமைக் கொடுமைக்கு எப்படி முற்றுப்புள்ளி வைப்பது என்பதைப் பற்றியே எந்நேரமும் எண்ணிக் கொண்டிருந்தார், 1887ஆம் ஆண்டில் இரெங்கநாயகி அம்மாளைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2 பெண்பிள்ளைகளும் 4 ஆண்பிள்ளைகளும் பிறந்தனர். நீலகிரியில் ஓர் ஆங்கிலேயருடைய நிறுவனத்தில் எழுத்தராக வேலைக்குச் சேர்ந்தார். பத்து ஆண்டுகள் அங்கு பணியாற்றிய பின் 1890இல் சென்னைக்கு வந்தார்.

1891இல் பறையர் மகாசன சபையைத் தோற்றுவித்தார். 1893 -1900 வரை ‘பறையன்’ என்ற மாத இதழை நடத்தினார். இதே காலகட்டத்தில்தான் 1.12.1891இல் பண்டித அயோத்திதாசர் நீலகிரியில் திராவிட மகா சபையின் முதல் மாநாட்டைக் கூட்டினார். அதில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றி ஆங்கில அரசுக்கும், காங்கிரசுக் கட்சிக்கும் அனுப்பிவைத்தார். 1892இல் அதை ஆதிதிராவிட மகாசன சபை எனப் பெயர் மாற்றி பதிவும் செய்தார்.

அயோத்திதாசரின் முதல் மனைவி இறந்த பிறகு, இரட்டைமலை சீனிவாசனின் தங்கை தனலட்சுமியை இரண்டாவது மனைவியாகத் திருமணம் செய்து கொண்டார். ஆதித் திராவிடப் பெண்கள் படிக்காத அக்காலத்திலேயே இந்த அம்மையார் எட்டாம் வகுப்பு வரை படித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

1900ஆம் ஆண்டில் வேலைத் தேடி தென்னாப்பிரிக்கா சென்றார். அங்கு நீதிமன்றத்தில் ஆவணங்களை மொழிபெயர்த்துக் கூறும் வேலை பார்த்தார். தென்னாப்பிரிக்காவில் இருந்தபோதே இங்கு 1916இல் பார்ப்பனரல்லாதார் இயக்கம் தோன்றியது. அதனை ஒட்டி 1917இல் ஆதித் திராவிட மகாசபை எம். சி. இராசா போன்றவர்களால் புதுப்பிக்கப்பட்டது. 1921இல் நாடு திரும்பினார்.

மாண்டேகு செம்சுபோர்டு சீர்திருத்தப்படி 1920இல் நடைபெற்ற தேர்தலின் போது சென்னை மாகாண சட்டசபைக்குத் ஆதி திராவிடரில் இருந்து ஐந்து உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர். (1937 வரை ஓர் அவை மட்டுமே இருந்தது. 1937 முதல் இரண்டு அவைகள் செயல்பட்டன) இரண்டாவது தேர்தலுக்குப் பின் 19.11.1923இல் இரட்டைமலை சீனிவாசன், எல். சி. குருசாமி உள்ளிட்ட 10 பேர் (பட்டியல் சாதியினர்) சட்டசபையின் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டனர். 1920 முதல் 1936 வரை ஆதி திராவிடர் யாரும் எந்தத் தேர்தலிலும் போட்டியிடவில்லை.  எல்லா நிலையிலும் நியமனம் மூலமாகவே உறுப்பினராக்கப்பட்டனர். 22.08.1924இல் சட்ட சபையில் இரட்டைமலை சீனிவாசன் ஒரு முக்கியமான தீர்மானத்தை முன்மொழிந்தார். அத்தீர்மானத்தை அரசும் ஏற்றுக்கொண்டது. அத்தீர்மானம் 24.02.1925 அரசிதழில்  வெளியிடப்பட்டது.

அத்தீர்மானங்கள்: எந்த வகுப்பையாவது, சமூகத்தையாவது சேர்ந்த யாதொரு நபராகிலும், நபர்களாகிலும் யாதொரு பட்டணம், அல்லது கிராமத்திலுள்ள எந்த பொது வழி அல்லது தெரு மார்க்கமாயினும் நடப்பதற்கு ஆட்சேபணை இல்லையென்பதும்.

இந்த தேசத்திலுள்ள சாதி இந்துக்கள் எம்மாதிரியாகவும், எவ்வளவு மட்டிலும் யாதொரு அரசாங்க அலுவலகத்தின் வளாகத்திற்குள் போகலாமோ, யாதொரு பொதுக்கிணறு, குளம் அல்லது பொதுமக்கள் வழக்கமாய் கூடும் இடங்களைப் பயன்படுத்தலாமோ அல்லது பொதுவான வேலை நடத்தப்பட்டு வருகின்ற இடங்கள், கட்டடங்கள் ஆகியன இவைகளுக்குள் போகலாமோ அம்மாதிரியாகவும் அம்மட்டிலும், ஆதி திராவிடர் வகுப்பினைச் சேர்ந்த யாதொரு நபர் போவதற்காவது, உபயோகிப்பதற்காவது ஆட்சேபணை இல்லையென்பதும், அரசின் கொள்கையாகும் என்று அறிவிக்கப்பட்டது.

இரட்டைமலை சீனிவாசன் சட்டசபையில் 1923 நவம்பர் முதல் 1939இல் சட்டசபைக் கலைக்கப்படும் வரை உறுப்பினராகப் பணியாற்றினார். அப்போது ஆதிதிராவிட மக்களின் வாழ்வியல்  உரிமைகளுக்காக ஓயாது குரல் கொடுத்து வந்தார்.

20.01.1922இல் எம். சி. இராசா சட்டசபையில் கொண்டு வந்த தீர்மானத்தின்படி பறையர், பள்ளர் என்ற பெயர் நீக்கப்பட்டு ஆதித்திராவிடர் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. பெயர் மாற்றம் செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகியும் பல பத்திரப் பதிவு அலுவலகங்களில் பறையன், பஞ்சமன் என்றே பதிவு செய்யப்படுகிறது. இதை அரசு உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என இரட்டைமலை சீனிவாசன் 25.08.1924இல் சட்டசபையில் முறையிட்டார். உடனடியாக தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அன்றைய முதல்வர் பனகல் அரசர் பதிலளித்தார். பரம்பரை மணியக்காரர் முறையை நீக்கி அனைத்து சாதியினரும்  ஆதிதிராவிடர் உள்பட மணியக்காரராக வர வழிவகை செய்ய வேண்டும் எனச் சட்டசபையில் அரசுக்குக் கோரிக்கை வைத்தார். இதே கோரிக்கையை அருந்ததிய சாதி உறுப்பினரான எல். சி. குருசாமியும் முன் வைத்தார்.  இவர்களின் கோரிக்கை 60 ஆண்டுகளுக்குப்பின் ம.கோ.இரா (எம்.ஜி.ஆர்) ஆட்சிக் காலத்தில் நிறைவேறியது.

இரட்டைமலை சீனிவாசன் ஒவ்வோறு ஆண்டும் தவறாமல் நிதியறிக்கையின் மீது உரையாற்றுவது வழக்கம். அவரது முதல் நிதியறிக்கையின் உரை 06.02.1925 அன்று தொடங்கியது. ஆதித் திராவிட மக்களுக்குத் தேவையான நிதி ஒதுக்கீடு, கல்வி வளர்ச்சி, சுகாதார வளர்ச்சி, பஞ்சமி நில ஒதுக்கீடு போன்றவற்றை வற்புறுத்தினார். மற்றுமொரு முக்கிய தீர்மானம் மதுக்கடைகளை மூடவேண்டுமென்பது. கலால் வரி அதிகமாகக் கிடைப்பதால் ஆங்கில அரசு இந்தியா முழுவதும் நிறைய மதுக்கடைகளை திறந்து வைத்திருந்தது. இதில் உழைக்கும் மக்களான அடித்தட்டு மக்களின் பணம் உறிஞ்சப்படுவதாக சீனிவாசன் கருதினார். முழுமையாக மூடச் சொன்னால் மூட மாட்டார்கள் என்பதால் குறைந்தளவு விடுமுறை நாட்களிலாவது மதுக்கடைகளை மூடவேண்டும் என்று 24.09.1929இல் சட்டசபையில் ஒரு தீர்மானம் கொண்டு வந்தார். அதை அரசு ஏற்றுக்கொண்டது.

ப. சுப்பராயன், 1933 சனவரி 31ஆம் நாள் சென்னை சட்டசபையில் ஆதிதிராவிடர்களை கோயிலில் நுழைய அனுமதிக்கச் சட்டமியற்ற வேண்டும் என்று ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தார். இத்தீர்மானத்தை ஆதரித்து இரட்டைமலை சீனிவாசன் பேசினார். இத்தீர்மானம் சட்டசபை வாக்கெடுப்புக்கு விடப்பட்டது 56 வாக்குகள், ஆதிதிராவிடர் கோயில் நுழைவுக்கு ஆதரவாகவும் 19 வாக்குகள் நடுநிலையாகவும் இருந்தது. எதிர்ப்பின்றி இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இந்துக்களின் சமய நம்பிக்கைகளை பாதிப்பதாகக் கூறி, இந்தியாவின் தலைமை ஆளுனர் (கவர்னர் செனரல்) ஒப்புதல் அளிக்காததால் இத்தீர்மானத்துக்கு சட்ட ஏற்பு கிட்டவில்லை.

ஆதி திராவிடர்களின் முதல் மாநில மாநாடு 29.01.1928 இல் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் நடைபெற்றது. இரட்டைமலை சீனிவாசன் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். எம்.சி. மதுரை பிள்ளை வரவேற்புரையாற்றினார். வரவேற்புக் குழுவின் தலைவர் என். சிவராஜ் சிறப்புரையாற்றினார். இம்மாநாட்டின் முக்கிய நோக்கம் அப்போது இந்தியாவிற்கு வரவிருந்த சைமன் குழுவிற்கு அறிக்கை தயாரித்துக் கொடுப்பதற்கான குழு அமைப்பதும், ஆங்கில அரசிற்கு ஆதி திராவிடர்களின் தேவைகளை வலியுறுத்துவதும் ஆகும். இம்மாநாட்டில் ஆதி திராவிடர்களுக்குத் தனித் தொகுதி வேண்டும் என்றும், 21 வயது அடைந்த அனைவருக்கும் வாக்குரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும், கல்வி, வேலைவாய்ப்புகளில் ஆதி திராவிடர்களுக்கு உரிய பங்களிப்பு அளிக்கப்பட வேண்டும். உயர் கல்வி உள்பட அனைத்துக் கல்வியும் இலவசமாக வழங்கப்பட வேண்டும் எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 1927 வரை பச்சையப்பன் கல்லூரியில் ஆதித் திராவிட மாணவர்களைச் சேர்த்துக் கொள்ளவில்லை. 1928இல் தான் முதன்முறையாக ஆதித் திராவிட மாணவர்களுக்கு கதவு திறக்கப்பட்டது.

1928ஆம் ஆண்டு செங்கற்பட்டில் நடைபெற்ற முதல் சுயமரியாதை மாநாட்டில், மாநாட்டிற்கான கொடி அறிமுகப்படுத்தப்பட்டது. அக்கொடியில் வெறும் தியாகராயர், டி.எம். நாயர், பனகல் அரசர், தந்தை பெரியார் உருவத்தோடு சூரியன் எழுவதைப்போல மட்டுமே இருந்தது. ஆனால் இரண்டு மலைகளுக்கு இடையே சூரியன் உதயமாவதைப் போன்ற சின்னம் தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் ‘சென்னை மாகாண ஷெட்யூல்டு காஸ்ட் ஃபெடரேஷன்’ என்ற அமைப்பின் சின்னமாக உதயசூரியன் இருந்தது. தனது பெயரில் உள்ள இரட்டைமலையைக் குறிக்கும் விதமாக தான் ஆரம்பித்த இயக்கத்திற்கு இரட்டைமலையிலிருந்து சூரியன் உதயமாவதைப் போல தாத்தா வடிவமைத்திருந்தார். மேலும் இதன் கொள்கையை விளக்க ஜே.ஜே. தாஸ் ஆகியோருடன் இணைந்து 1941ஆம் ஆண்டு இதழ் ஒன்றையும் தாத்தா நடத்தியிருக்கிறார்.  அதன் பெயர்தான் உதயசூரியன். இந்த வரலாறுகளையெல்லாம் இன்றைய இளைய தலைமுறைக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய தேவை அதிகரித்துள்ளது.

1930 – 32 களில் இலண்டனில் நடைபெற்ற வட்டமேசை மாநாட்டில் இரட்டைமலை சீனிவாசன் ஆதிதிராவிட மக்களுக்கு இரட்டை வாக்காளர் தொகுதி வழங்கப்பட வேண்டும் என்றும், ஆதிதிராவிட மக்களின் விகிதாச்சார அளவுக்கு ஏற்ப கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் உரிய பங்கு அளிக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்திப் பேசினார். இதே கோரிக்கையை வலியுறுத்தி அம்பேத்கரும் மிக விரிவாக வட்டமேசை மாநாட்டில் பேசினார்.

அம்பேத்கர் 1935இல் தான் மதம் மாற வேண்டு என அறிவித்தபோது இரட்டைமலை சீனிவாசன் “நாம் தான் இந்து மதத்தில் இல்லையே (அவர்ணஸ்தர்) வருணம் அற்றவர்கள் ஆயிற்றே, நாம் இந்துவாக இருந்தால் தானே மதம் மாற வேண்டும்” என்று அம்பேத்கருக்கு தந்தி மூலமாக தன் கருத்தைத் தெரிவித்தார். அயோத்திதாசர் பவுத்தம் தழுவ உதவிய கர்னல் ஆல்காட்டை 1880 களிலேயே சந்தித்து உரையாடிவந்த போதிலும், சீனிவாசன் பவுத்தம் தழுவவில்லை. பின்னர் அம்பேத்கரோடு தொடர்பு கொண்டிருந்தபோதும் அவருடைய மதமாற்றம் பற்றிய கருத்தோடு சீனிவாசன் இணக்கம் கொள்ளவில்லை. ஆனாலும், ஒடுக்கப்பட்டோரின் ஆன்மிக மரபுகளைத் தேடுவதில் அவர் ஆர்வம் கொண்டிருந்தார். இதன்படி, பின்னாளில் ஆலயப் உள்நுழைவு நடந்தபோது பல்வேறு கோயில்களில், தாழ்த்தப்பட்ட மக்கள் முற்காலத்தில் பெற்றிருந்த உரிமைகளை எடுத்துக்காட்டி,  ஆலயப் உள்நுழைவை ஆதரித்தார். திருவாரூர் தியாகராசப் பெருமாள் கோயிலில் தியாகசாம்பான் வழிவந்தோர்க்கென்று அளிக்கப்பட்ட உரிமைகள், கும்பகோணத்தில் பாழாக்கப்பட்ட நந்தன் கோட்டை மதில் போன்றவற்றைப் பற்றியெல்லாம் சீனிவாசன் பேசியிருக்கிறார்.

பஞ்சம நிலத்திற்காக தான் நடத்திய இதழ்கள் வழியே, தான் வகித்த பொறுப்புகளின் வழியே அவரது போராட்டம் தனி வடிவம் பெற்றது. ஒரு இதழியலாளராக, அரசியல்வாதியாக, சமுதாய சிந்தனைவாதியாக, பட்டியல் மக்களின் தலைவராக, பஞ்சம நிலவுரிமைவாதியாக, மத ஒழிப்புவாதியாக அவரது சமூகப் பங்களிப்பு மிகவும் அதிகம்.

தலித் என்றாலே கல்வி நிலையிலும் பொருளாதார நிலையிலும் சமூக நிலையிலும் பின்தங்கிய பலதரப்பட்ட பிரிவு மக்களை உள்ளடக்கியதாக இருப்பதால் பட்டியல் மக்களின் சிக்கல்கள் அதில் தனித்த கவனம் பெறுவதோ அல்லது தீர்வைப் பெறுவதோ இல்லை. முன்பு தலித் என்ற சொல்லை அழைக்க தொண்டு நிறுவனங்கள் மூலம் இறக்கிவிட்டு புழக்கத்தில் விட்ட அரசுகள், இப்போது அழைக்க வேண்டாம் என்று சொல்வதால் அது நமக்கு வலு சேர்ப்பதாகவும் ஒற்றை கருத்தாகவும் ஆகாது. இவர்களின் நோக்கமென்பது வேறு, நமது பார்வை என்பது வேறு. இது இரண்டையும் குழப்பி இங்கே அரசியல் செய்யப்படுகிறது. குறிப்பாக எனக்குப் பெயர் வைக்க இவர்கள் யார்? எமக்கான பெயரை எமது ஆசான்கள் வைத்துள்ளார்கள். பாபாசாகேப் அம்பேத்கர் தலித் என்கிற பதத்தை எங்கும் கையாளவில்லை. தீண்டப்படாத மக்கள், ஷெட்யூல்டு அதாவது அட்டவணைப் படுத்தப்பட்ட பட்டியல் மக்கள் என்கிறார். இதை முதலில் நாம் புரிந்துகொள்ள வேண்டும். அவரது கோட்டு, சூட்டு, பூட்சு, மீசை கூட சாதிய ஆதிக்க எதிர்ப்பின் குறியீடாகவும் கற்றறிந்த மேதை என்பதையும் பறைசாற்றுவதாக இருக்கும்.

சென்ற நூற்றாண்டிலேயே கல்வியில் நன்கு விளங்கிய ஆதித் தமிழ்குடி மக்களே விளங்கியபோதும், இன்றும் ஈரோட்டு இராமசாமிதான் நம்மை படிக்க வைத்தார் என்று உருட்டும் திராவிட கும்பலை என்னவென்று சொல்வது.

இவர் 1945 செப்டம்பர் 18இல் எண்பத்தி ஆறாவத் வயதில் இயற்கை எய்தினார். இவரது  பணிகளைப் பாராட்டி ஆங்கில அரசு, அவருக்கு ‘இராவ்சாகிப்’, ‘திவான் பதூர்’, ‘இராவ் பகதூர்’ ஆகிய பட்டங்களை அளித்துச் சிறப்பித்தது. 2000ஆம் ஆண்டில் இந்திய ஒன்றிய அரசு அஞ்சல் தலை வெளியிட்டு அவருக்குச் சிறப்பு செய்தது.

பட்டியல் இன மக்களின் வரலாறுகள் எதுவும் இங்கே ஆவணப்படுத்தப்படாமல் இருக்கின்றது,  திட்டமிட்டு மறைக்கப்படுகிறது.  சிறந்த ஆளுமைகளான தாத்தா இரட்டைமலை சீனிவாசன், எம்.சி. இராசா, தந்தை சிவராசு ஆகியோரது சட்டமேலவை உரைகள், தீர்மானங்கள், அவைக்குறிப்புகள் போன்றவற்றைப் பெறுவதில் கூட இங்கே சிக்கல் நிலவுகிறது. இதில் விதிவிலக்கானவர் அண்ணல் அம்பேத்கர் ஒருவரே. ஏனெனில் அவர் தான் வாழும் காலத்திலேயே தனது பேச்சுகளையும் எழுத்துக்களையும் ஆவணமாக்கி தந்துவிட்டே சென்றிருக்கிறார். அதேபோல பல தலைவர்களின் போராட்டங்கள், வாழ்வியல் வலிகள், அனுபவித்த துன்பங்கள் அனைத்தையும் பல சோதனைகளைக் கடந்து நாம் ஆவணமாக்க முனைய வேண்டும்.

தாத்தா இரட்டைமலையார்  புகழ் வணக்கப் பா!

 

நிலத்தை உழுதே

வாழ்ந்த குடியின்

பிரிவினர் – தாத்தா

இரட்டை மலையே

தமிழர் நம்மின்

உறவினர்!

 

குறைகள் கூறும்

மடையர் நாணத்

திருத்தினார் – சிறைக்

கூண்டை உடைக்கும் 

சிறுத்தை போன்ற

குணத்தினார்!

 

கோழி யாளம்

செங்கற் பட்டே

முன்னிடம் – பின்னர்

சென்னை நகரே

இவரின் நல்ல

பிறப்பிடம்!

 

இந்து இல்லை

என்றே சொல்லி

மறுத்தவர் – நம்மை

இழித்துப் பகர்ந்தோர்

தலையில் ஏறி

மிதித்தவர்!

 

ஆழ வழக்கை

உரைக்கும் செருக்கின்

வன்மையர் – அறிவுத்

திறத்தால் எதையும்

வெல்லும் ஆற்றல்

நன்மையர்!

 

நொந்து சாகும்

தமிழர் வாழ்வை

நினைத்தவர் – கோயில்

நுழைய உரிமை

கேட்கும் துணிவைப்

படைத்தவர்!

 

இலண்டன் சென்றே

தீண்டா மையினைக்

கதைத்தவர் – சீர்

திருத்தம் செய்தே

மக்கள் நெஞ்சில்

நிலைத்தவர்!

 

சென்னை மாநிலச்

சட்ட அவையின்

உறுப்பினர் – குமுகத்

தொண்டில் உயர்ந்தே

படையை நடத்திய

சிறப்பினர்!

 

 

பறையன் என்ற

திங்கள் இதழை

நடத்தினார் – அவர்

பண்டைத் தமிழர்

நாங்கள் என்றே

உணர்த்தினார்!

 

என்னுள் உன்னுள்

இருக்கும் வேற்றுமை

அகற்றுவோம் – நாம்

தமிழர் என்ற

மாண்பை எடுத்துப்

புகட்டுவோம்!

 

தனித்தமிழ்வேங்கை மறத்தமிழ்வேந்தன்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

About Us

Lorem ipsum dol consectetur adipiscing neque any adipiscing the ni consectetur the a any adipiscing.

Email Us: infouemail@gmail.com

Contact: +5-784-8894-678

Thamizhmeetchi  @2024. All Rights Reserved.