தியாக தீபம் திலீபன்
திலீபன் எனும் பெயரில் அறியப்படும் பார்த்திபன் இராசையா என்பவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு தொடக்ககால உறுப்பினரும் முக்கிய உறுப்பினராகவும் இருந்தவராவர். இவர் இலங்கையில் யாழ்ப்பாணம் ஊரெழு எனும் ஊரைச் சேர்ந்தவர். இவரின் மறைவின் பின்னர் புலிகள் அமைப்பில் லெப்டினன் கேணல் திலீபன் எனும் நிலை வழங்கப்பட்டது.
மகாத்மா காந்தியின் அகிம்சை தத்துவத்தைத் தனது அடிப்படை அரசியல் கொள்கையாக
பறை சாற்றும் இந்திய அரசிடம், தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறைகளுக்கு நீதி கேட்டு, ஆயுதப் போராளியான திலீபன், அகிம்சை வழியில் செப்டம்பர் 15, 1987 அன்று ஐந்து கோரிக்கைகளை முன் வைத்து நீர் கூட அருந்தாமல் உண்ணா நோன்புப் போரைத் தொடங்கினார்.
இந்திய அமைதிப் படையினரிடம் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து காந்திய வழியில் நீரும் அருந்தா உண்ணா நோன்பு இருந்து, அக்கோரிக்கைகள் நிறைவேற்றப்படா சமயம் உறுதியுடன்
அவ் உண்ணா நோன்பினால் உயிர்துறந்தவர். இவரை இந்திய அரசு இறக்க விட்டது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இந்திய இராணுவத்துக்குமிடையே பின்னர் ஏற்பட்ட போருக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.
1987 செப்டெம்பர் 15ஆம் திகதி ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து உண்ணா நோன்பைத் தொடங்கினார். 1987ஆம் ஆண்டு செப்டெம்பர் 26ஆம் திகதி சனிக்கிழமை காலை 10.48 மணிக்கு லெப்டினன் கேணலாக, யாழ் மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்த திலீபன் மரணம் எய்தினார்.
- மீளக்குடியமர்தல் என்ற பெயரில் வடக்கிலும் கிழக்கிலும் புதிதாக திட்டமிடும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும்.
- சிறைக் கூடங்களிலும் இராணுவ காவல் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.
- அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்படவேண்டும்.
- ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்படவேண்டும்.
- தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்படவேண்டும்.
12 நாள்களும் ஒரு சொட்டுத் தண்ணீரைக்கூட அருந்தாமல் கோரிக்கைகளில் உறுதியாக இருந்தார் திலீபன். அதனால், அவரது உடல்நிலை மோசம் அடைந்தது. 1987 செப்டம்பர் 26ஆம் நாள் காலை 10.48 மணிக்கு திலீபனின் உடலிலிருந்து உயிர் பிரிந்தது.
அந்த 12 நாள்களில் மூன்று முறை அவர் மக்களிடம் பேசினார். “நான் மனரீதியாக ஆத்மார்த்தமாக எமது மக்கள் விடுதலை அடைவார்கள் என உணர்கிறேன். மகிழ்ச்சியுடனும் பூரண திருப்தியுடனும் உங்களிடமிருந்து இறுதி விடைபெறுகிறேன்.” என்றார். இதையேதான் அவர் மூன்று முறை பேசியபோதும் சொன்னார். ஆம், பார்த்திபன் இன்னும் பசியோடுதான் இருக்கிறான்.
திலீபனின் உண்ணா நோன்புத் தொடர்பாகவோ கோரிக்கைகள் தொடர்பாகவோ இலங்கையின் பெரும்பான்மை மக்களான சிங்களவர்களின் புரிதல் மிகக் குறைவு. அதற்கான காரணம் சிங்கள ஊடகங்கள் வெளியிடும் செய்திகளே அவர்களுக்கு கிட்டுவதும், அதுவே உண்மை என பெரும்பான்மை சிங்கள சமூகம் நம்பிவிடுவதும் சில காரணங்களாகும், இருப்பினும் அதனையும் தாண்டி உண்மையறிதல் எனும் கொள்கைக் கொண்ட சிங்களவர்களும் இருக்கவே செய்கின்றனர். அவ்வாறானவர்களின் பார்வையில் திலீபனின் உண்ணாவிரதமும் அவர் கொண்ட கொள்கையின் திடமான பற்றும், அவரது சாகும் வரையான துணிவும் கூட பேசப்படுகின்றன. குறிப்பாக திலீபனின் கொள்கைக்கான உண்ணா நோன்பை, விமல் வீரவங்ச போன்ற சிங்கள அரசியலாளர்களின் கபடமான போலி உண்ணாவிரதத்தையும் ஒப்பிட்ட சிங்களப் பதிவுகளும் உள்ளன.
“மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்” என்ற விடுதலைவாசகத்தை உரக்க கூவி, தன் வாழ்வை தமிழரின் விடுதலை வேள்வியில் ஆகுதியாக்கியவர் தியாக தீபம் திலீபன்.
ஆம், பார்த்திபன் இன்னும் பசியோடுதான் இருக்கிறான்.
ஈகைச் சுடர் திலீபன்
உண்ணா நோன்பில்
உலகை வென்ற
ஒப்பிலா இளைஞன்
திலீபன் !
மண்ணில் விடுதலை
எண்ணித் துணிந்தே
மண்டி இடாதவன்
திலீபன் !
இந்தியக் கொலைப்படை
வந்து நுழைந்ததை
ஏற்க மறுத்தவன்
திலீபன் !
ஐந்து கோரிக்கை
நிறைவேற் றிடவே
அருமுயிர் ஈந்தவன்
திலீபன் !
பச்சைத் தண்ணீர்
உமிழ்நீர் விழுங்கா
உறுதியின் உச்சியே
திலீபன் !
அச்சப் படாமல்
இந்திய முகத்திரை
அறுபடக் கிழித்தவன்
திலீபன் !
போரில் என்றும்
வீழ்ந்து விடாத
வீரம் கொண்டவன்
திலீபன் !
பாரில் தமிழ்மண்
செழிக்கத் தன்னுயிர்
பாய்ச்சிய தற்கொடை
திலீபன் !
யாழ்மா வட்ட
அரசியல் பிரிவில்
பொறுப்பாய் நின்றவன்
திலீபன் !
கீழ்மை அறுக்கச்
சிங்களம் நொறுக்கக்
கிளம்பிய புலியே
திலீபன் !
காலம் தந்த
தலைவர் படையில்
நெருப்பாய்ச் சுழன்றவன்
திலீபன் !
ஞாலம் போற்றும்
புறநானூற்றின்
பிறப்பாய் எழுந்தவன்
திலீபன் !
மருத்துவத் தொண்டு
மக்களுக் கென்றே
அன்றே படித்தவன்
திலீபன் !
பெருத்த சிங்களக்
கொடியவன் மடிய
வெடித்த மறவன்
திலீபன் !
வயிற்றில் குண்டு
பாய்ந்த போழ்தும்
களப்பணி புரிந்தவன்
திலீபன் !
அயரா துழைக்கும்
மருத்துவப் பாசறை
அடையா ளம்தான்
திலீபன் !
தனித்தமிழ்வேங்கை மறத்தமிழ்வேந்தன்

