மறைமலை அடிகள் புகழ் பெற்ற தமிழறிஞர், தமிழ் ஆய்வாளர். தமிழையும் வடமொழியையும் ஆங்கிலத்தையும் நன்குக் கற்றவர். உயர்தனிச் செம்மொழியாம் தமிழை, வடமொழிக் கலப்பின்றித் தூய நடையில் எழுதிப் பிறரையும் ஊக்குவித்தவர். சிறப்பாக தனித்தமிழ் இயக்கத்தைத் தொடங்கித் தமிழைச் செழுமையாக வளர்த்தவர். பரிதிமாற் கலைஞரும் மறைமலை அடிகளும் தனித்தமிழ் இயக்கத்தின் இரு பெரும் முன்னோடித் தலைவர்கள். குல சமய வேறுபாடின்றிப் பொதுமக்களுக்குக் கடவுட்பற்றும், சமயப் பற்றும் உண்டாக்கும் முறையில் சொற்பொழிவுகள் ஆற்றுவதில் வல்லவர். சைவத் திருப்பணியும், சீர்திருத்தப் பணியும் செவ்வனே செய்து தமிழர்தம் உள்ளங்களில் நீங்காத இடம் பெற்றவர்.
மறைமலை அடிகளின் இயற்பெயர் வேதாசலம். இவர் 1876 சூலை 15ஆம் நாள் திருக்கழுக்குன்றத்திலே பிறந்தார். தந்தையார் சொக்கநாதபிள்ளை, தாயார் சின்னம்மையார். தந்தையார் நாகப்பட்டினத்தில் அறுவை மருத்துவராய் பணியாற்றி வந்தார். பல்லாண்டுகள் பிள்ளைப்பேறு இல்லாமல் இருந்து திருக்கழுக்குன்றம் சிவன் வேதாசலரையும், அம்மை சொக்கம்மையையும் வேண்டி நோன்பிருந்து பிள்ளைப்பேறு பெற்றதால், தம் பிள்ளைக்கு வேதாசலம் என்று பெயரிட்டார். பின்னர்த் தனித்தமிழ்ப்பற்று காரணமாக 1916இல் தம் பெயரை மறைமலை (வேதம் = மறை, அசலம் = மலை) என்று மாற்றிக்கொண்டார். அவர் தம்முடை பிள்ளைகள் திருநாவுக்கரசு, நீலாம்பிகை தவிர மற்றவர்களின் வடமொழிப்பெயர்களைத், திருஞான சம்பந்தம் – அறிவுத்தொடர்பு, மாணிக்க வாசகம் – மணிமொழி, சுந்தரமூர்த்தி – அழகுரு, திரிபுரசுந்தரி – முந்நகரழகி எனத் தனித்தமிழாக்கினார்.
மறைமலைஅடிகள், நாகையில் வெசுலியன் தொண்டு நிறுவனக் கல்லூரியைச் சேர்ந்த உயர்நிலைப்பள்ளியில் நான்காம் படிவம் வரை படித்தார். அவருடைய தந்தையாரின் மறைவு காரணமாக அவரால் பள்ளிப்படிப்பைத் தொடர முடியவில்லை. ஆனால், நாகையில் புத்தகக் கடை வைத்திருந்த தமிழ்ப்புலமை மிகுந்த நாராயணசாமிப் பிள்ளை என்பவரிடம் தமிழ் கற்றார். ‘சைவ சித்தாந்த சண்டமாருதம்’ என்று புகழ் பெற்றிருந்த சோமசுந்தர நாயக்கர் அவர்களிடம் சைவ சித்தாந்தம் கற்றார்.
சென்னைக்கு வந்த பின்னர் கிறித்தவக் கல்லூரியில் வீ.கோ.சூரியநாராயண சாத்திரியாருடன் தமிழாசிரியராகப் பணிபுரிந்தார். 1905இல் சைவ சித்தாந்த மகா சமாசம் என்ற அமைப்பைத் தோற்றுவித்தார். அதன் மாநாட்டுத் தலைமையையும் ஏற்றார். பல்லாவரத்தில் இராமலிங்க வள்ளலாரின் கொள்கைப்படி1912இல் “சமரச சுத்த சன்மார்க்க சங்கம்” தொடங்கினார். பின்னர் தனித்தமிழ் ஈடுபாட்டால் அதனைப் “பொதுநிலைக் கழகம்” எனப் பெயர் மாற்றினார். திருமுருகன் அச்சுக்கூடத்தை ஏற்படுத்திப் பல நூல்களை வெளியிட்டார். மணிமொழி நூல்நிலையம் என்னும் நூல்நிலையத்தை உருவாக்கினார். மறைமலை அடிகள் “பல்லாவரம் முனிவர்” என்றும் குறிப்பிடப்பட்டார்.
இவர் காலத்தில் பல புகழ் பெற்ற தமிழறிஞர்கள் வாழ்ந்தனர். மனோன்மணீயம் இயற்றிய சுந்தரனார், பெரும்புலவர் கதிரைவேலர், திரு. வி. கலியாணசுந்தரனார், நாவலர் ச. சோமசுந்தர பாரதியார், ‘தமிழ் தாத்தா’ உ. வே. சாமிநாதையர், தணிகைமணி வ.சு.செங்கல்வராயர், இரசிகமணி டி. கே. சிதம்பரநாதர், பேராசிரியர் ச. வையபுரியார், கோவை இராமலிங்கம், சுப்பிரமணிய பாரதியார், மீனாட்சி சுந்தரனார், பொத்தக வணிகரும் மனோன்மணீயம் ஆசிரியர் சுந்தரனாரின் ஆசிரியரும் ஆன நாராயணசாமி, ‘சைவசித்தாந்த சண்டமாருதம்’ என்று புகழப்பட்ட சோமசுந்தர நாயகர், என்று பலர் வாழ்ந்த காலம்.
தமிழர்கள் அனைவரும் கலப்படமின்றி தமிழ் பேச கடப்பாடு கொண்டால் நம் தாய்மொழியான தமிழ்மொழி வாழும் என்ற உணர்வு கொண்ட வெகு சிலரில் ஒருவர். ‘தனித்தமிழ் இயக்கம்’ என்ற ஒரு மாபெரும் இயக்கத்தையே தொடங்கி தமிழுக்காக அரும்பங்காற்றியிருக்கிறார். தமிழ் உலகம் அவரை ‘தமிழ்க்கடல்’ என்றும், ‘தனித்தமிழின் தந்தை’ என்றும் போற்றுகிறது.
தமிழ் இலக்கியத்தில் அவருக்கு இருந்த தனியாத தாகத்தால் தொல்காப்பியம், சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, பதினொன் கீழ்கணக்கு போன்ற சிக்கலான நூல்களையும் தெளிவாக கற்றுத் தேர்ந்தார்.
சிறு வயதிலிருந்தே தன்னோடு பழகி வந்த செளந்தரம் என்ற பெண்ணை மணந்து கொண்டு ஏழு பிள்ளைகளுக்கு தந்தையானார் மறைமலை அடிகள்.
நாகை மீனலோசனி என்ற செய்தித்தாளுக்கு தகவல் சேகரித்துக் கொடுக்கும் பணியை அவர் மேற்கொண்டார். சைவ சித்தாந்தத்தில் பெயர் பெற்ற சோமசுந்தர நாயக்கரின் சொற்பொழிவுகளைப் பாராட்டி அந்த பத்திரிகையில் அவர் கட்டுரைகள் எழுதினார். அவற்றைப் படித்து இரசித்த நாயக்கருக்கு அவருடைய எழுத்தின் மீது ஈடுபாடு ஏற்படவே சித்தாந்த தீபிகை என்ற மாத இதழின் ஆசிரியப் பணியில் மறைமலை அடிகளை அமர்த்தினார். அந்தப் பணியை விருப்பமுடன் செய்த அதே வேளையில் தமிழாசிரியராக வர வேண்டும் என்ற தமது விருப்பத்துக்காகவும் உழைத்தார் மறைமலை அடிகள். தமிழாசிரியர் பணித் தேர்வுக்கு தம்மை தயார் செய்து கொண்டார். அந்தப் பணிக்காக நடைபெற்ற நேர்முகத் தேர்வில் மறைமலை அடிகளின் புலமையை சோதித்தவர் அப்போது புகழ் பெற்றிருந்த பரிதிமார் கலைஞர் என்ற தமிழறிஞர்.
மறைமலை அடிகளின் புலமை அவருக்கு தமிழாசிரியர் பணியைப் பெற்றுத் தந்தது. மாதம் 25 உரூபாய் சம்பளத்தில் வேலைக்குச் சேர்ந்தார். பின்னர் சொந்தமாக இதழ் நடத்த விரும்பிய மறைமலை அடிகள் 1902ஆம் ஆண்டு ஞானசாகரம் என்ற இதழைத் தொடங்கினார். அதன் பெயரை பின்னர் அழகு தமிழில் ‘அறிவுக்கடல்’ என்று மாற்றினார். காலப்போக்கில் தனக்கு சோறு போட்ட தமிழ் மொழியின் மேம்பாட்டுக்காக தன் வாழ்க்கையை ஒப்படைக்கத் துணிந்தார் மறைமலை அடிகள். தமிழாசிரியர் பணியை விட்டு விட்டு சொந்தமாக தொழில் தொடங்கினார். ஆங்கிலம், சமசுகிருதம் போன்ற மொழிகளின் தாக்கம் தமிழில் பரவிக் கிடந்ததை உணர்ந்து வருந்திய மறைமலை அடிகள் கலப்படத்திலிருந்து தமிழை மீட்கவும், தனித்தமிழில் பேசவும், எழுதவும் தமிழர்களுக்கு ஊக்கமூட்ட முடிவெடுத்தார். வெறும் பேச்சோடு நின்று விடாமல் அதற்கு தாமே முன்னத்தி ஏராக செயல்படத் தொடங்கினார். தனித்தமிழ் இயக்கத்தை நிறுவினார். அப்போதுதான் தன் பெயரை மறைமலை அடிகள் என்று மாற்றிக் கொண்டார். அவரைப் பின்பற்றி பல தமிழர்கள் தங்களுக்கு தூய தமிழில் பெயரை மாற்றிக் கொண்டனர்.
முல்லைப்பாட்டு, பட்டிணப்பாலை போன்ற நூல்களுக்கு எளிமையான தமிழில் உரை எழுதினார். கடுமையானத் தமிழாக இல்லாமலும், கலப்புத் தமிழாக இல்லாமலும் எவரும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் தூயத் தமிழை அவர் பயன்படுத்தினார். வடமொழியில் காளிதாசன் படைத்த சாகுந்தலம் எனும் காதல் காவியத்தைத் தமிழில் மொழிப் பெயர்த்தார். மொழிக்கலப்பு தமிழ் மொழிக்குப் பாதிப்பாக அமையும் என்று நம்பிய அவர் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு இந்தி மொழி தடையாக இருக்கக்கூடாது என்பதில் கவனமாகவும், குறியாகவும் இருந்தார். இந்தி மொழி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறைக்கும் சென்றார். ஆனால் தமிழ், தமிழ் என்று மட்டும் அவர் கண்மூடி வாழவில்லை. ஆங்கில மொழிப் புலமையும் அவசியம் என்பதை அவர் உணர்ந்திருந்தார். ஆங்கிலத்தில் உள்ள நல்ல நூல்களைப் படித்தறியவும், நல்ல தமிழ் நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும் ஆங்கிலப் புலமை அவசியம் என்று அவரே கூறியிருக்கிறார்.
தனித்தமிழ் இயக்கத்தின் காரணமாக அந்தக்கால கட்டத்தில் வழக்கத்திலிருந்த பல சமசுகிருத சொற்கள் வழக்கொழிந்து போயின. நமஸ்காரம், ஜலம், சந்தோஷம், அபேட்சகர் போன்ற வடமொழி சொற்கள் முறையே வணக்கம், நீர், மகிழ்ச்சி, வேட்பாளர் என்றாயின. அந்தத் தூய தமிழுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டியது மறைமலை அடிகளுக்குதான். தமிழையே உயிர் மூச்சாக வாழ்ந்த அவர் தம் வாழ்நாளில் மொத்தம் 56 நூல்களை எழுதினார். அவருக்கு தெய்வ பக்தி நிறைய இருந்தாலும் முற்போக்கு சிந்தனையும் அதிகமாக இருந்தது.
தம் வாழ்நாளில் அவர் காதலித்த இரண்டில் ஒன்று தமிழ், மற்றொன்று மனைவி செளந்தரம். எனவே மனைவி இறந்த சில மாதங்களிலேயே பிரிவைத் தாங்காமல் அவரும் மரணத்தைத் தழுவினார். கடைசி வரை தமிழுக்காக உழைத்த மறைமலை அடிகள் 1950ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ஆம் நாள் தமது 75வது அகவையில் காலமானார்.
‘தனித்தமிழ் இயக்கம்’ என்ற ஒன்று தேவைதானா? என்று எவர் வேண்டுமானாலும் எளிமையாக கேள்வி கேட்டுவிடலாம். அவரைப் போன்றோர் சிந்திய வியர்வையின் பலனாகத்தான் இன்று நமது தமிழ்மொழி செம்மொழித் தகுதியைப் பெற்றிருக்கிறது. அவருக்கு தமிழுலகம் நன்றி கூறும் அதே வேளையில் அவரிடமிருந்துக் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் என்ன என்பதையும் நாம் சிந்தித்து செயல்படவும் வேண்டும்.
