பேராசிரியர் சி. இலக்குவனார்
பேராசிரியர் சி. இலக்குவனார் (நவம்பர் 17, 1909 – செப்டம்பர் 3, 1973) தமிழறிஞர்களில் தனிச் சிறப்பு வாய்ந்தவர். மொழியியல், இலக்கணம், தொல்காப்பிய ஆராய்ச்சி, திருக்குறளாராய்ச்சி, சங்க இலக்கிய ஆராய்ச்சி எனப் பல்வேறு பொருள்களில் நிறைய நூல்களை இயற்றியுள்ளார்.
1909ஆம் ஆண்டு நவம்பர் 17ஆம் நாள் நாகப்பட்டிணம் மாவட்டம், திருத்துறைப்பூண்டிக்கு அருகில், வாய்மேடு என்னும் சிற்றூரில், சிங்காரவேலர் இரத்தினத்தாச்சி இணையருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். தமது நான்கு வயதிலேயே தந்தையை இழந்தார். வாய்மேட்டில் திண்ணைப் பள்ளியிலும் பின்னர் அரசு தொடக்கப் பள்ளியிலும் ஐந்தாம் வகுப்பு வரை படித்திருந்த இலக்குவனாரின் பள்ளிப்படிப்பு தடைப்பட்டது. சிறிது காலம் தமது அண்ணன் நல்லபெருமாளுக்கு உதவியாக வேணாண் வேலைகளைக் கவனித்து வந்தார்.
இவரை படிக்க வைக்க வேண்டும் என்ற அவரது தாயார் விருப்பத்தால் இராசாமடம் நடுநிலைப் பள்ளியில் 1924ஆம் ஆண்டில் ஐந்தாம் வகுப்பில் சேர்ந்து படிக்கத் தொடங்கினார். பின்னர் 1924ஆம் ஆண்டில் ஒரத்தநாட்டில் இருந்த உயர்நிலைப்பள்ளிகளில் பயின்று பள்ளி இறுதி வகுப்பில் சிறப்புடன் தேர்ச்சி பெற்றார். அதன்பின்னர் திருவையாறு அரசர் கல்லூரியில் பயின்று 1936ஆம் ஆண்டில் புலவர் பட்டம் பெற்றார். அங்கு பயிலும்பொழுது அக்கல்லூரியின் திருவள்ளுவர் மாணவர் கழகச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அப்போதைய சென்னைப் பல்கலைக் கழகம் வகுத்திருந்த விதியின்படி வித்துவான் பட்டம் பெற்றவர் இடைநிலை வகுப்பிலும் கலை இளவர் வகுப்பிலும் இரண்டாம் பிரிவில் இருந்த ஆங்கிலப் பாடத்தில் தேர்ச்சி பெற்றதால், அவருக்கு கீழைமொழிகளில் இளவர் (BOL) பட்டம் வழங்கப்பட்டது. இப்பட்டம் கலைமுதுவர் பட்டத்திற்கு இணையாகக் கருதப்பட்டது. இலக்குவனார் ஆசிரியப்பணி ஆற்றிக்கொண்டே ஆங்கிலத் தேர்வுகளில் வெற்றிபெற்று கலைமுதுவர் ஆனார். பின்னர் தமிழ்மொழியின் தோற்றமும் வளர்ச்சியும் (Origin and Growth of Tamil Language) என்னும் தலைப்பில் ஆய்வுசெய்து கீழைமொழிகளில் முதுவர் (MOL) பட்டமும் பெற்றார்.
இலக்குவனார், மதுரைத் தியாகராசர் கல்லூரியில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, தொல்காப்பியத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, விரிவாக ஆய்வும் நிகழ்த்தித் 1963இல் முனைவர் பட்டப் பேற்றிற்காக Tholkappiyam in English with critical studies என்னும் ஆய்வேட்டை அளித்து முனைவர் பட்டம் பெற்றார். தமிழ்நாடெங்கும் இவருக்கு பாராட்டுவிழாக்கள் நடந்தன. இவரது தொல்காப்பிய ஆங்கில நூலுக்கு அறிஞர் அண்ணா அவர்கள் அணிந்துரை வழங்கிப் பாராட்டியுள்ளார். பின்னர் அண்ணா தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றபோது, தமது அயல்நாட்டுச் சுற்றுப்பயணத்தில், இந்நூலைப் போப் ஆண்டவர் அவர்களுக்கும், அமெரிக்க நூகலகங்களுக்கும் தமிழக அரசின் சார்பில் அன்பளிப்பாக வழங்கினார்.
திருவையாறு அரசர் கல்லூரியில் சிலகாலம் ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர் தஞ்சை மாவட்ட நாட்டாண்மைக் கழக உயர்நிலைப் பள்ளிகளில் (Tanjore District Board High Schools) தமிழாசிரியராகப் பணிபுரிந்தார். அதன்பின்னர் 1945 வரை திருவையாறு அரசர் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணிபுரிந்த இலக்குவனார், அன்றைய சுயமரியாதை இயக்கத் தலைவர்களில் ஒருவராகிய செ.தெ.நாயகம், குலசேகரன்பட்டினத்தில் தொடங்கிய தமிழ்க் கல்லூரியில் முதல்வராகப் பணியமர்த்தப் பெற்றார். பின்னர் திருநெல்வேலி ம.தி.தா. இந்துக் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகவும், 1947இல் விருதுநகரில் தொடங்கப்பெற்ற வி.இ.செந்திற்குமாரநாடார் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராகவும் பணிபுரிந்தார். பின்னர் 1952 முதல் 1955 வரை புதுக்கோட்டையில் பி.ஏ. சுப்பிரமணியனார் உருவாக்கிய திருக்குறள் கழகத்தில் ஞாயிறுதோறும் திருக்குறள் வகுப்புகள் நடத்தினார்.
1955 – 56 ஆம் கல்வியாண்டில் திருச்சிராபள்ளி திருவெறும்பூர் முக்குலத்தோர் உயர்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியர், 1956 முதல் 1958 வரை ஈரோடு மகாசனக் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளர் , 1958 முதல் 1961 வரை நாகர்கோயில் தெ.தி. இந்துக் கல்லூரியில் தமிழ்த் துறைத் தலைவர், 1961 முதல் 1965 வரை மதுரை தியாகராசர் கலைக்கல்லூரியில் தமிழ்த் துறைத் தலைவர், சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழ்த் துறைத் தலைவர், ஐதராபாத்தில் உள்ள உசுமானியா பல்கலைக் கழகத்தில் தமிழ்த் துறைத் தலைவர், 1970 வரை நாகர்கோவில் தெ.தி. இந்துக் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றி ஓய்வு என இவர் பணியாற்றிய கல்லூரிகளின் பட்டியல் பெரிதாகும். இவரது அஞ்சாநெஞ்சமும், தன்மான உணர்வும் எவ்விடத்தும் இவர் தொடர்ந்து பணிபுரிய இடமளிக்கவில்லை. மாணவரிடையே தமிழுணர்வை இவர் ஊட்டியமை, இவர் மாணவர்களைப் புரட்சிக்குத் தூண்டுவதாகக் கல்லூரிப் பொறுப்பாளர்களைக் கருதச் செய்தது.
1944இல் இவர் திருநெல்வேலி ம.தி.தா. இந்துக்கல்லூரியில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது இவரிடம் தமிழ் பயின்ற, இன்றைய இந்தியப் பொதுவுடைமைக் கட்சித்தலைவர்களில் ஒருவராகிய தோழர் நல்லகண்ணு இவரது அஞ்சாநெஞ்சத்தையும் தமிழுணர்வையும் சிறப்பாகப் பாராட்டுகிறார். அன்றைய தமிழ் வகுப்புகளில் வருகைப்பதிவை ஆங்கிலத்தில் மாணவர்கள் கூறிவந்த நிலையை மாற்றி ‘உள்ளேன் ஐயா’ எனக் கூறவைத்தவரும் பிற்காலத்தில் தமிழகமெங்கும் இம்மாற்றம் ஏற்படவும் காரணமாக இருந்தவர் இலக்குவனாரே என நல்லுகண்ணு அவர்கள் கூறுகிறார்.
1944 முதல் 1947 வரை இவர் நடத்திய “சங்க இலக்கியம்” வார இதழ் புலவருக்கு மட்டுமே உரியதாகக் கருதப்பட்டுவந்த சங்க இலக்கியங்களை மக்களிடையே பரவ வழிவகுத்தது. சிறுகதை வடிவிலும் ஓரங்க நாடகங்களாகவும் சங்கப்பாடல்களை அறிமுகம் செய்தவர்.
1965இல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது இருமுறை கைது செய்யப்பட்டு சிறைவாழ்வும் பணிநீக்கமும் பெற்ற இலக்குவனார், அக்காலகட்டத்தில் ‘அமைச்சர்களைக் கொல்ல முயற்சி செய்தார்’ என்பது உட்பட பதினான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு 1965இல் கைது செய்யப்பட்டு ஐந்து வார சிறை வாழ்க்கைக்குப் பின்னர் திருநகரைவிட்டு எங்கும் செல்லக்கூடாது என்னும் கட்டளையோடும் ‘எப்பொழுதும் சிறைப்படுத்தப்படலாம்’ என்னும் ஆணையோடும் விடுவிக்கப்பட்டார்.
உயர்நிலைப் பள்ளிகளில் தமிழைப் பயிற்று மொழி ஆக்கியதைப் போல கல்லூரிகளிலும் எல்லாத் துறைகளிலும் எல்லா நிலைகளிலும் தமிழைப் பயிற்றுமொழி ஆக்க வேண்டும் என்னும் கோரிக்கையோடு 1965 மே 5ஆம் நாள் கன்னியாகுமரி முதல் சென்னை வரை தமிழ் உரிமைப் பெருநடை செல்ல இலக்குவனார் திட்டமிட்டார். அதனால் நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் மூன்றரை மாதங்கள் அடைக்கப்பட்டார். இதனால் மதுரை தியாகராசர் கல்லூரியில் இவர் ஆற்றிவந்த தமிழ்ப் பேராசிரியர் பணியில் இருந்து நீக்கப்பட்டார்.
மதுரையை அடுத்த திருநகரில் 1962 ஆகஸ்டு 6ஆம் நாள் தமிழ்மொழி வாழ்ந்தால் தமிழகம் வாழும் என்னும் நோக்கத்தை முன்வைத்து ‘தமிழ்க் காப்புக் கழகத்தை’ தொடங்கினார். இக்கழகத்திற்கு அவர் தலைவராகவும் புலவர் இரா. இளங்குமரன் பொதுச் செயலாளராகவும் அமைந்தனர். இக்கழகம் தமிழில் பேசுக! தமிழில் எழுதுக! தமிழில் பெயரிடுக! தமிழில் பயில்க! என்னும் நான்கு செயல் திட்டங்களை முன்வைத்துப் பணியாற்றியது.
இவர் திருத்தணியில் ஆசிரியராகப் பணியாற்றிய பொழுது மலர்க்கொடி என்பவரை சாதிமறுப்புத் திருமணம் செய்துகொண்டார். பின்னர் தம்மை விரும்பியவரும் தம் மனைவி மலர்க்கொடிக்குத் தங்கையுமான நீலகண்டேசுவரியை மணந்துகொண்டார். இவர்களுக்கு மொத்தம் பதினொரு குழந்தைகள் பிறந்தன.
முத்தமிழ்க் காவலர், செந்தமிழ் மாமணி, பயிற்சிமொழிக் காவலர், தமிழர் தளபதி, தமிழ் காத்த தானைத் தலைவர், இலக்கணச் செம்மல், தமிழ் அரிமா, தமிழ்ப் போராளி, 20ஆம் நூற்றாண்டுத் தொல்காப்பியர், இரண்டாம் நக்கீரர், பெரும் பேராசிரியர், தன்மானத் தமிழ் மறவர், இந்தி எதிர்ப்புப் படைத் தளபதி, செந்தமிழ்ப் படையின் மானச் செம்மல் போன்ற பட்டங்கள் இவருக்கு வழங்கப்பட்டன.
1973 செப்டம்பர் 3 ஆம் நாள் இலக்குவனார் அவர்கள் இயற்கை எய்தினார்.
செந்தமிழ்ச் செருக்கள வேந்தர் இலக்குவனார்
செந்தமிழ்ப் புலவர்
பைந்தமிழ் ஆய்வர்
இலக்குவ னார்நினை
வேந்தடா! – இவர்
இந்தியை எதிர்த்துச்
சிறைக்குகை சென்ற
மொழிப்போர் செருக்கள
வேந்தடா!
தமிழினில் பேசுக!
தமிழினில் எழுதுக!
தமிழினில் பயிலுக
தேனடா! – தனித்
தமிழெனில் உன்றனை
உயர்த்திடும் என்றவர்
தண்டமிழ் இலக்குவ
னாரடா!
மூப்பிலாத் தமிழை
முழங்கிய ஆசான்
ஆற்றிய செயல்பல
நூறடா! – தொல்
காப்பிய நூலை
ஆங்கில மொழியில்
பெயர்த்த பெருமிதம்
கூறடா!
சென்றிடும் இடங்களில்
மன்றமும் இதழ்களும்
சிறப்புற நிறுவினார்
தானடா! – என்றும்
குன்றிடாக் களப்பணி
தமிழ்ப்பணி ஒன்றென
வென்றவர் இலக்குவ
னாரடா!
இனத்தமிழ் உணர்வை
மூட்டிய அறிவர்
இசைத்தமிழ் நெருப்பின்
ஆறடா! – நம்
மனத்துயர் நீங்கிடத்
தாய்மொழிக் காப்புக்
கழகம் கண்டார்
பாரடா!
பாண்டியர் மரபில்
தோன்றிய மறவர்
பார்மிசை இலக்குவ
னாரடா! – அவர்
தூண்டிய இளம்படை
தமிழ்ப்பகை முடிக்கத்
துடிக்கும் வெடிக்கும்
காணடா!
– தனித்தமிழ்வேங்கை மறத்தமிழ்வேந்தன்

