அயோத்திதாசப் பண்டிதர்
ஆரிய எதிர்ப்பின் ஆதி விதையை விதைத்து சமூக விடுதலையை வென்றெடுப்பதற்காக 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிறப்பெடுத்தார் அறிவு ஆசான் புலவர் அயோத்திதாசர். சாதிய வேறுபாடுகள், தீண்டாமைக் கொடுமைகள் மிகத் தீவிரமாக இருந்த காலத்தில், பொதுப் பாதைகளைப் பயன்படுத்துவதற்கும், கிணறுகள் குளங்கள் போன்ற பொது நீர்நிலைகளில், தண்ணீர் குடிக்கவும்கூட உரிமையற்ற நிலையும், தீண்டத்தகாதவர்கள் என்றும் சமூகத்தால் ஊருக்கு வெளியே ஒதுக்கப்பட்டும், நிலமற்ற ஏழைகளாக, அழுக்கு மனிதர்களாக, பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியிருந்த அம்மக்களின் கல்வி கற்பதற்கான நிலையும் மோசமாக இருந்த காலத்தில், ஆதிக்க சாதியினர் நிலபுலங்களில் பறையர்கள் பண்ணையாள் என்னும் அடிமைகளாக சுரண்டப்பட்டும் ஒடுக்கப்பட்டுக் கிடந்தக் கொடுமையானதொருக் காலத்தில் அச்சமூகத்திலிருந்து அயோத்திதாசப் பண்டிதர் எழுச்சிப் பெற்று விளங்கியுள்ளார்.
தமிழறிஞர், தத்துவாதி, புலவர், எழுத்தாளர், அரசியல் சிந்தனையாளர், விமர்சகர், அரசியல்வாதி, பேச்சாளர், சித்த மருத்துவர், சமயப் புரட்சியாளர் போன்ற பன்முக ஆளுமையாய் அயோத்திதாசர் அம்பேத்கருக்கும் முற்பட்ட தாழ்த்தப்பட்டோர் அரசியலுக்கான கருத்தியல் முன்னோடியாகவும் தனித்து நிற்கிறார்.
அயோத்திதாசர் கோயம்புத்தூர், அரசம்பாளையம் என்னும் ஊரில் 1845, மே 20 ஆம் நாள் கந்தசாமி இணையருக்குப் பிறந்தார், இயற்பெயர் காத்தவராயன். போகர் நானூறு, அகத்தியர் இருநூறு, சிமிட்டு இரத்தின சுருக்கம், பாலவாகடன் போன்ற மருத்துவ நூல்களை ஓலைச் சுவடியிலிருந்து அச்சேற்றி நூல்களாக்கிய புலவரான வீ. அயோத்திதாச கவிராச புலவர் என்னும் தமது ஆசியரும் குருவுமான தமது ஆசிரியர் பெயரையே தமது பெயராக மாற்றியமைத்துக் கொண்டார். தமிழ் இலக்கியம், இலக்கணம், பன்மொழிப் புலமை, மருத்துவம் போன்ற கலைகளில் தேர்ந்தவர்களுக்கு பண்டிதர் என்னும் அடைமொழியை வழங்கி கௌரவிப்பது அக்காலத்து வழக்கமாயிருந்துள்ளது.
அயோத்திதாசரின் பாட்டனரான கந்தப்பன் அவர்கள் ஆங்கிலேய அதிகாரியான ஆரிங்க்டன் துரை என்பவரிடம் சமையல்காரராக பணிபுரிந்தவர். தாம் பாதுகாத்து வந்த சித்த மருத்துவ ஓலைச் சுவடிகளை ஆரிங்க்டன் துரை மூலம் தமிழார்வம் கொண்ட ஐசிஸ் அதிகாரியான எல்லீசு துரை அவர்களிடம் சேர்ப்பித்து 1831 களிலேயே அவை அச்சேற்றம் பெற்று திருவள்ளுவர் வரலாற்றைப் பேசும் திருவள்ளுவர் மாலை, நாலடி நானூறு ஆகிய நூல்களாக வெளிவரக் காரணமாக இருந்துள்ளார். நமக்குக் கிடைத்த “திருக்குறள்” இவரின் தாத்தா பாதுகாத்து வைத்திருந்த நூல் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
அயோத்திதாசரின் தந்தையார் கந்தசாமியும் சித்த மருத்துவ பொருட்களைத் தயாரித்து விற்பனைச் செய்யும் தொழில் ஆர்வலராகவும் இருந்துள்ளார். ஆங்கிலேய அதிகாரிகளுடனான தொடர்பு அவர்களது ஆங்கில மொழி துணைபுரிந்துள்ளது மேலும் சென்னை தேனாம்பேட்டை, ஆயிரம் விளக்குப் பகுதிகளில் வாழ்ந்த நகர வாழ்க்கைச் சூழல் அறிவார்ந்தவர்களின் தொடர்பை அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
1870 இல் தனது 25 ஆவது வயதில் “அத்வைதானந்த சபை” ஒன்றைத் தொடங்கி தேயிலைத் தோட்டப் பணியாளர்களையும் மலையினப் பழங்குடி மக்களையும் ஒருங்கிணைத்துச் சாதி பேத உணர்வை ஒழிக்கப் பாடுபட்டார். மலையினத்து தோடர் பெண்ணை மணம் செய்து கொண்டார்.
பண்டிதர் வைணவ மரபை ஆதரித்தாலும் “இந்து” என்ற அடையாளத்தை ஏற்க மறுத்தார். இந்த அடையாளத்தை ஏற்றுக் கொண்டால் “சாதியை” ஏற்றுக் கொண்டதாகப் பொருள் என்றார்.
இவர் சில காலம் இரங்கூனில் (மியான்மர்) வாழ்ந்தார். அங்கு தனது மனைவிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையும் அவரது துணைவியாரும் நோயினால் இறந்து போயினர். பின்னர் 10 ஆண்டுகளுக்குப் பிறகு நீலகிரிக்குத் திரும்பியவர், தனது உறவினர் இரட்டைமலை சீனிவாசனின் தங்கை தனலட்சுமியைத் திருமணம் செய்து கொண்டார்.
1881இல் ஆங்கில அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது, தாழ்த்தப்பட்டவர்களை “ஆதித் தமிழன்” என்று பதிவு செய்ய கோரிக்கை வைத்தார். சாதி தான் தமிழனுக்கு அடையாளமாக இருந்தது. சாதியின் பெயரால் அழைக்கப்பெற்ற தமிழரை சாதியற்ற தமிழர்களாக பதிவுசெய்தார். 1885இல் ஜான் இரத்தினம் தொடங்கிய “திராவிட பாண்டியன்” என்ற இதழின் துணை ஆசிரியராகப் பொறுப்பேற்று தாழ்த்தப்பட்ட மக்களின் விழிப்புணர்வுக்காகவும், அவர்களின் விடுதலைக்காகவும் பாடுபட்டார்.
1886ஆம் ஆண்டு “ஆதித்தமிழர்கள்” (தாழ்த்தப்பட்டோர்) இம்மண்ணின் மைந்தர்கள், அவர்கள் இந்துக்கள் அல்ல என பிரகடனப்படுத்தினார். 1890ஆம் ஆண்டு நீலகிரியில் “திராவிட மகாஜன சபை” என்ற பெயரில் ஒரு அமைப்பைத் தொடங்கி ஒடுக்கப்பட்டோரை ஒருங்கிணைத்தார். திராவிட மகா ஜன சபை சார்பில் 1891ஆம் ஆண்டு ஒரு மாநாட்டை நடத்திப் பல தீர்மானங்களை இயற்றி அதனைக் காங்கிரசு கட்சி செயலாளருக்கும் ஆங்கிலேய அரசுக்கும் அனுப்பி வைத்தார். அந்தத் தீர்மானங்களில் குறிப்பிடத்தக்கது. “பறையர்” எனக் கூறுவது குற்றம் எனச் சட்டம் இயற்ற வலியுறுத்தியது. பொது இடங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் நுழைய அனுமதி கோரியது பொது கிணறுகள் மற்றும் குளங்களிலிருந்து தண்ணீர் எடுப்பதற்கு அனுமதி கோரியது ஆகியவைகளாகும்.
1892ஆம் ஆண்டு சென்னை விக்டோரியா அரங்கில் நடைபெற்ற மகாஜன சபை மாநாட்டில், நீலகிரியின் பிரதிநிதியாக கலந்து கொண்டு ஒடுக்கப்பட்டோர் கோவிலுக்குள் நுழைய அனுமதி வேண்டும் என்று குரல் கொடுத்தார். அங்கு கலந்து கொண்ட ஆதிக்கச் சாதியினரின் கவனத்தைத் தன் பக்கம் திருப்பி அடுக்கடுக்கான கேள்விகளைத் தொடுத்தார். பதில் சொல்ல முடியாத ஆதிக்க சாதியினர் அவரை எதிர்த்துக் கண்டனக் குரல் கொடுத்தனர்.
1898இல் எச்.எஸ். ஆல்காட் துரை அவர்களை சந்தித்து தமது மக்களுக்கும் பௌத்த நெறிமுறைகளுக்குமான ஆதி உறவு குறித்து எடுத்துரைத்து தாமும் தம்முடன் சிலரும் பௌத்தம் தழுவ ஆர்வமாயிருப்பதாக தெரிவிக்கிறார். அயோத்திதாசரையும் அவருடன் சிலரையும் இலங்கை அழைத்துச் செல்கிறார் ஆல்காட். கொழும்புவில் பஞ்சசீலம் பெற்று பௌத்தம் ஏற்கிறார் பண்டிதர். சென்னை திரும்பிய பண்டிதர் “தென்னிந்திய சாக்கிய பௌத்த சங்கம்” நிறுவி சமயத்தைப் பரப்பும் பணியில் தன்னை தீவிரமாக ஈடுபடுத்திக் கொள்கிறார். தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, வட ஆற்காடு, திருப்பத்தூர் ஆகிய பகுதிகளிலும் பெங்களூர், கோலார் தங்கவயல், கூப்ளி போன்ற கர்நாடகப் பகுதிகளிலும் தொடர்ந்த சமயப்பணி பர்மா, தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட அயல் நாடுகளுக்கும் விரிவடைந்துள்ளது. இக்காலக்கட்டத்தில் தான் “புத்தர் என்னும் இரவு பகலற்ற ஒளி” என்னும் அரிய நூலை எழுதி வெளியிடுகிறார் அயோத்திதாசர். தாழ்த்தப்பட்டோருக்குச் சென்னையில் 5 பள்ளிக் கூடங்களை நிறுவி அவர்கள் கல்வி கற்க வழிவகுத்தார்.
புத்த விகார்களையும் நிறுவி பௌத்த மறுமலர்ச்சியை உருவாக்கினார். தமிழகத்தில் கி.மு.300 முதல் கி.பி.600 வரை எழுச்சியோடு இருந்த பௌத்தத்தை இந்து மதம் தன்வயப் படுத்தியது. அந்தப் பௌத்தப் பண்பாட்டினை 1898இல் மீட்டெடுத்து பௌத்தத்தை மீண்டும் தமிழகத்தில் வலுப்பெறச் செய்தார்.
1902ஆம் ஆண்டு தென்னிந்திய பவுத்த சாக்கி சங்கத்தை ஏற்படுத்தினார். 1907ஆம் ஆண்டு சூன் திங்கள் 19ஆம் நாள் “ஒரு பைசாத் தமிழன்” என்ற பெயரில் ஒரு வார இதழைச் சென்னை இராயப்பேட்டையில் தொடங்கி வெளியிட்டார். தமிழ் மணம் பரப்ப விரும்பும் தமிழர் ஒவ்வொருவரும் ஆதரிக்க வேண்டுமென அப்போது கோரிக்கை வைத்தார். 1908ஆம் ஆண்டு இதழின் பெயரைத்
“தமிழன்” என்று பெயர் மாற்றம் செய்து வெளியிட்டார். தமிழகத்தில் தமிழர்களுக்கென்று எந்த இயக்கமும் தோன்றாத காலத்தில் தமிழன் இதழ் மூலம் பிராமணிய எதிர்ப்பு, சாதி ஒழிப்பு, பகுத்தறிவு, மூடநம்பிக்கை, மொழிப்பற்று, இன உணர்வு, சமூக நீதி மற்றும் சுயமரியாதை இவற்றை மையமாகக் கொண்டு இதழை நடத்தினார்.
மண்ணின் மைந்தர்களே இம்மண்ணை ஆள வேண்டும். விடுதலையை அளித்தால், அதனை மண்ணின் மைந்தர்களிடமே வழங்க வேண்டும். நேற்று குடியேறியவர்களையும் முன்னர் குடியேறியவர்களையும் சுதேசிகள் எனக் கருதி ஆரியர்களிடம் ஆட்சியை வழங்கினால். நாடு பாழாகிச் சீர் கெட்டுவிடும் என்று எழுதினார்.
அயோத்திதாசர், தமிழ் நாட்டின் பகுத்தறிவு இயக்கத்திற்கு முன்னவராக இருந்தார். பிராமனர்களுக்கு அடிமை இந்துக்கள். இந்துக்கள்தான் சூத்திரர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் சூத்திரர்கள் அல்ல. அவர்களுடைய வேதம், புராண நூல், கோயில், சாதி முதலியன தாழ்த்தப்பட்டவர்களுக்கு சொந்தமானது அல்ல. தாழ்த்தப்பட்டோர் ஒருவருக்கும் தாழ்ந்தவர்கள் அல்ல என்று பிரகடனம் செய்தார்.
அயோத்தி தாசரே தமிழகத்தில் “நாம் தமிழர்” என்னும் உணர்வை ஏற்படுத்தியவர் ஆவார். அவர் தமிழர்களுக்கு மொழி உணர்வை ஊட்டினார். தந்தை பெரியார் பிறப்பதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் பகுத்தறிவு சமத்துவப் பரப்புரையைத் தொடங்கியவர் அயோத்திதாசர் ஆவார்.
தமிழகத்தில் பிராமணர் அல்லாதோர் இயக்கமாகத் தோற்றம் கொண்ட திராவிட இயக்கம் 1912 இல் சி.நடேசனாரிடமிருந்து தொடங்குகிறது என்று சொல்லப்படுவதற்கும் முற்பட்டது. 1870களில் ஆதிதிராவிட சங்கங்கள், 1890களில் திராவிட மகாஜன சபை, 1892களில் ஆதிதிராவிட ஜன சபை, 1916களில் ஆதிதிராவிட மகாஜன சபை என்று திராவிட அரசியலை மையமாகக்கொண்ட இயக்கங்கள் தோன்றி இயங்கியிருப்பதுடன் இவை தமிழகத்தில் பேசப்படும் திராவிட அரசியல் இயக்க வரலாற்றுக்கும் முற்பட்டதாகவும் விளங்குகின்றன.
மேற்சொன்ன இயக்கங்கள் பற்றிய பதிவுகள் தவிர்க்கப்பட்டிருப்பதாக கூறும் குற்றச்சாட்டுகளுக்கு திராவிட இயக்க வழித்தோன்றல்கள் என்பவர்களிடமிருந்து உரிய பதில் இல்லாமல் கனத்த கள்ள மவுனம் காக்கப்படுகிறது.
அயோத்திதாசரின் அரசியல் சமூக சமய சிந்தனைகள் போலவே இலக்கியப் பணிகளும் மிகவும் விரிவானவை. 25க்கும் மேற்பட்ட நூல்கள், 30க்கும் மேற்பட்ட தொடர் கட்டுரைகள், அரசியல் கட்டுரைகள் விமர்சனங்கள், ஓலைச்சுவடிகளுக்கான விளக்க உரைகள், கேள்விகளுக்கான பதில்கள், திருக்குறளுக்கான விளக்கவுரை என விரிகிறது அவரது இலக்கியத் தொண்டு. (திருக்குறளுக்கான விளக்கவுரை முற்றுப்பெறுவதற்குள் பண்டிதர் பரிநிர்வாணம் அடைந்துவிட்டதால் 55 அதிகாரங்களுடன் நின்றுவிட்டது). அயோத்தி தாசர் 1912இல் புத்தரின் வரலாற்றை “புத்தரது ஆதிவேதம்” என்ற நூலாக எழுதி பெரும் பணியாற்றி இருக்கிறார். அதுமட்டும் அல்லாது முருகக் கடவுள் வரலாறு, அரிச்சந்திரன் பொய்கள், இந்திரர் வேத சரித்திரம், திருவள்ளுவர் வரலாறு, யதார்த்த பிராமண வேதாந்த விவரம், வேஷ பிராமண வேதாந்த விவரம், விபூதி ஆராய்ச்சி என்று முதலிய பல்வேறு ஆராய்ச்சி நூல்களையும் எழுதினார்.
அயோத்திதாசப் பண்டிதர் அவர்கள் 1914, மே 5ஆம் நாள் பரிநிர்வாணம் அடைந்தார். மதத்தின் மீது தான் வைத்திருந்த பற்றால் அயோத்திதாசரை எதிர்த்ததை வருந்தி அயோத்திதாசர் மறைந்த போது அவரைப் பாராட்டிக் கீழ்கண்டவாறு திரு.வி.க. பதிவு செய்துள்ளார்.
“பண்டிதர் வாழ்வை நீத்தபோது யான் ஈமம் வரை சென்று திரும்பினேன். அயோத்திதாசர் என் குடும்ப மருத்துவர். அவர் தம் சங்கம் என் மத வெறியைத் தீர்க்கும் மருந்தாயிற்று”
தலித் சமூகத்தின் பெருமைமிகு வரலாற்றை சான்றாதாரங்களோடு எடுத்துரைத்தல், தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்துக்கும் சமூக நீதியை நிலைநாட்டுவதற்கும் அரசியல் உள்ளிட்ட அனைத்து மட்டங்களிலும் வகுப்புவாரி பிரதிநிதித்துவமும் இட ஒதுக்கீடும் கோருதல், சாதி ஒழிப்பு, பௌத்தம் ஏற்பு மற்றும் அச்சமயத்தை மீட்டுருவாக்கம் செய்தல், தீண்டாமைக் குறித்த வரலாற்றுப் பார்வை, பகுத்தறிவு சிந்தனை உள்ளிட்டு அயோத்திதாசரிடம் குவிந்து கிடக்கும் முற்போக்குச் சிந்தனைகளை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். தலித் மக்களின் விடுதலை சார்ந்த சிந்தனைகளில் புரட்சியாளர் அம்பேத்கருக்கும் முற்பட்டவர் அவர்கள்.
தமிழ் அறிவு, சமூக அறிவு, மருத்துவ அறிவு, ஆரிய எதிர்ப்பு, பகுத்தறிவு புரட்சி, தமிழ் உணர்வு, இன உணர்வு என்று அனைத்திலும் பண்டிதரே தமிழகத்திற்கு மட்டும் அல்லாது இந்தியாவிற்கே தத்துவ நோக்கில் வழிகாட்டி வழி நடத்தினார் என்றால் மிகையல்ல.
அயோத்திதாசர்
பகுத்தறி வற்ற
பல்லோர் நிமிர – அறிவைப்
புகுத்திய அறிஞர்
அயோத்தி தாசர் !
தகவிலார் தம்மை
தானுயர் வாக – என்றும்
தாங்கிப் புகழா
தமிழின் நேயர் !
பகலும் இரவும்
உழைத்த தாத்தா – “ஒரு
பைசாத் தமிழன்”
இவரிதழ் பார்த்தா !
முகமாய்த் தமிழை
முழங்கிய புலவர் – அட
முற்றும் கருத்தை
விதைத்த உழவர் !
பெரியார் இவரின்
வழியில் நடந்தார் – சாதி
பேசுவோர் தோலை
உரிக்கப் புகுந்தார் !
திருடர் கயவரால்
மறைக்கப் பட்டவர் – தொல்
தமிழரே நாட்டின்
குடியென நட்டவர் !
இந்து என்பதை
எதிர்த்தே துடித்தார் – குமுக
நயன்மை படைக்க
நாளும் வெடித்தார் !
செந்தமிழன் என்ற
உணர்வை ஊட்டினார் – சினந்தே
சீறும் புலியாய்த்
துணிவை நாட்டினார் !
அம்பேத் கரையும்
புத்தம் ஆக்கினார் – தீமை
அனைத்தும் எரிக்கும்
தீயின் நாக்கினார் !
வம்பகர் நடுங்க
எழுத்தை வடித்தார் – தமிழ்
வரலா றெடுத்தே
எங்கும் உரைத்தார் !
மருத்துவத் துறையிலும்
மாண்பு படைத்தவர் – திரு.வி.க.
நலம்பெற மருத்துவம்
நாடிக் கொடுத்தார் !
திருடர் கயவரால்
மறைக்கப் பட்டவர் – தொல்
தமிழரே நாட்டின்
குடியென நட்டவர் !
குருதி மறுப்புத்
திருமணம் செய்தவர் – புத்தர்
கொள்கை பரப்ப
அறிவை நெய்தவர் !
பரிதி போலவே
எழுந்து வந்தவர் – தமிழ்ப்
பகையை முடிக்க
வெளிச்சம் தந்தவர் !
பணத்தால் அரசியல்
பண்ணவும் மாட்டார் – ஏய்க்கப்
பார்ப்பான் காலிலும்
விழவும் மாட்டார் !
குணத்தால் உயர்ந்த
தமிழின் தாத்தா – அவரைக்
கொண்டு நிறுத்தடா
மேல்வெளி பார்த்தா !
தனித்தமிழ்வேங்கை மறத்தமிழ்வேந்தன்

